இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேலமதா கோரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டம் அறிவிப்பு
தேர்தல் நெருங்கிக்கொண்டே இருக்கும் சூழலில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ ஆகிய அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன.
ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களும் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேலமதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது:
’’தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வித் துறையில் அன்றாடம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் கடமைப்பட்ட பணிகளுக்கு முறையான ஊதியம் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்துக்கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பணி மற்றும் தகுதிக்கு ஏற்ப ஊதியம் பெறவில்லை. அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இது தொழிலாளர் உரிமைகளுக்கு அடிப்படை கொள்கை என்பதால், இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பணியில் இருந்தவர்களுக்கு உரிய ஓய்வூதியம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே மீட்டெடுத்து, பணியில் இருந்தவர்களுக்கு உரிய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை உடனடியாக சரிசெய்து, அவர்கள் பணி கடமைகளுக்கு ஏற்ற முறையான ஊதிய கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கு முன் இருந்த நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புக
இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். எனவே திமுக அரசு, அதன் தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் பணி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு எடுக்க வேண்டும்.
நிறுத்தப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக இந்த தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்’’.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.