யூபிஎஸ்சி தேர்வு தொடர்பான அப்டேட்டுகளை மொபைல் வழியாகவே இனி உடனுக்குடன் பெறலாம். இதற்காக UPSC- Official App என்ற பெயரில் புது செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
தேர்வு முறை எப்படி?
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தேர்வர்கள் யூபிஎஸ்சி தேர்வு தொடர்பான அப்டேட்டுகளை மொபைல் வழியாகவே பெற புதிய வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வு, இனி உடனுக்குடன் பெறலாம். இதற்காக UPSC- Official App என்ற பெயரில் புது செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
UPSC செயலி: அம்சங்கள் என்ன?
தேர்வு விவரங்கள், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், அவற்றுக்கான தேர்வு விவரங்கள், தேர்வு முடிவுகள், ஆள் சேர்ப்பு விவரங்கள், அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை செயலி வழியாகவே இனி மேற்கொள்ளலாம்.
இவை தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் விவரங்களும் அவற்றுக்கான இணைப்பும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செயலியைப் பதிவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.upsc.upsc
2022 யூபிஎஸ்சி தேர்வுகள்
2022ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் ஜூன் 5 ஆம் தேதி அன்று இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஜி.எஸ். முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் ஜி.எஸ். 2ஆவது தாள் எனப்படும் சிசேட் தேர்வு 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெற்றது.
முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் 16, 17, 18, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மதியம் 2 முதல் 5 மணி வரையிலும் இரண்டு வேளைகளில் தேர்வு நடைபெற்றது.
ஜூன் முதல் வாரம் நடைபெற்ற யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் 20 நாட்களுக்குள் வெளியிடப்பட்டு, தற்போது முதன்மைத் தேர்வுகளும் (mains) நடத்தி முடிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.