2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுக்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதற்கான ப்ரிளிம் அல்லது முதற்கட்டத் தேர்வுகள் 5 ஜூன் 2022ம் அன்று நடைபெற உள்ளன.இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் சிவில் சர்வீஸ் பணியிடங்களில் 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம். கடந்த ஆண்டில் 712 காலிப் பணியிடங்கள் உண்டாகின. 2020ம் ஆண்டில் 796 காலிப் பணியிடங்களும், 2019ம் ஆண்டில் 896 காலிப்பணியிடங்களும், 2018ல் 782 காலிப் பணியிடங்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கு விண்ணப்பிக்க  https://upsconline.nic.in என்கிற தளத்துக்குச் செல்லவும். 



முன்னதாகக் கடந்த ஆண்டு இந்த தேர்வுகளுக்கான முதல்நிலைத் தேர்வு தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 22 இந்திய குடிமை பணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 27ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தேர்வுகள் தள்ளிப்போகும் என்ற கருத்து நிலவி வந்தது. பல்வேறு மாநிலங்களும் கொரோனா பாதிப்பால மிகவும் தவித்து வரும் சூழலில் இந்த தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்துவது கடினம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 


இந்நிலையில் இதையடுத்து யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமாக உள்ளதால் வரும் ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த முதல்நிலை தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி நடத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டது. இந்த அறிவிப்பு தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


மக்கள் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சூழலில் சரியாகத் தேர்வுக்கு படிக்க முடியவில்லை என்று மாணவர்கள் வருத்தத்துடன் இருந்தனர். இந்த தேர்வு தள்ளிவைப்பு அறிவிப்பு அவர்களுக்கு கூடுதல் நேரத்தை அளித்துள்ளது. இதனால் அவர்கள் சற்று நிம்மதியாக தேர்வு எதிர்கொள்ள தயாராகலாம். ஏற்கெனவே 2020 ஆண்டும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு மே மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதம் 4ம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டாவது முறையாக 2021 ஆண்டும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் இதுபோல தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


2020ம் ஆண்டு தேர்வின் நேர்காணல் மிகக் காலதாமதமாக நடைபெற்றது. அதற்கான நேர்காணல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தது. எனினும் கொரோனா தொற்று அதிகரித்ததால் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நேர்காணல் தேர்வுகள் அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் எனச் சொல்லப்பட்டது. இதுபோல இந்த ஆண்டுக்குமான நேர்காணல்களிலும் தாமதம் ஏற்படுமா என்கிற கேள்வியும் நிலவி வருகிறது.