இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்று யுபிஎஸ்சி. நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வை ஆண்டுதோறும் எழுதி வருகின்றனர். ஆனாலும் ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் மட்டுமே யுபிஎஸ்சி தேர்வில் பாஸாகின்றனர். ஏனெனில் இந்தத் தேர்வு கடின உழைப்பைக் கோரக் கூடியது. திட்டமிடல், அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, நீடித்த முயற்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.


வாழ்நாள் கனவு


இதனால் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதே பலரின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. பலருக்கும் கனவாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும் திட்டமிட்டுப் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஒரே நாளில் இந்தியத் திருநாட்டின் அடையாளமாகி விடுகின்றனர். ஊடகங்களாலும் பொது மக்களாலும் கொண்டாடப்படுகின்றனர்.


இந்த நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாத நபர் ஒருவரின் பதிவு, இணையவாசிகளின் இதயங்களில் நுழைந்து கவனமீர்த்துள்ளது.


வாழ்க்கையின் இன்னொரு பெயர் போராட்டமோ என்னவோ?


ஆந்திர மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த குணால் விருல்கர் என்னும் யுபிஎஸ்சி தேர்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ’’12 அட்டெம்ப்டுகள், 7 முறை மெயின்ஸ் தேர்வுகள், 5 முறை நேர்காணல் தேர்வு. ஆனாலும் தேர்வாகவில்லை. வாழ்க்கையின் இன்னொரு பெயர் போராட்டமோ என்னவோ?’’ என்று பதிவிட்டுள்ளார்.


அந்தப் பதிவில், யுபிஎஸ்சி டெல்லி தலைமைச் செயலகத்தின் முன்பு அவர் நிற்கும் புகைப்படத்தையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளார்.


அவரின் பதிவு 2.3 மில்லியன் பார்வைகளைக் கொண்டு வைரலாகி வருகின்றது. 31 ஆயிரம் லைக்குகளைத் தாண்டிச் சென்று வருகிறது. ஏராளமான எக்ஸ் பயனாளர்கள், அவருக்கு உத்வேக வார்த்தைகளைக் குறுஞ்செய்தியாகப் பகிர்ந்து வருகின்றனர்.






வாழ்க்கை இன்னும் பெரிய உயரங்களை அளிக்கக்கூடும்!


குணாலின் பதிவு குறித்து ஒரு பதிவர் வெளியிட்டுள்ள பதில் குறிப்பில், ’’உங்களின் பெயரைக் காண ஆசைப்பட்டேன். ஒரு வேளை வாழ்க்கை இன்னும் பெரிய உயரங்களை அளிக்கக் காத்திருக்கலாம்.


உங்களின் போராட்டத்தையும் நீங்கள் மேற்கொண்ட விடாமுயற்சியையும் விவரிக்க வார்த்தைகள் போதவில்லை. நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள். உங்களால் நாங்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.


குணாலின் பயணம் குறித்து திரை தயாரிப்பாளர் வினோத் காப்ரி வெளியிட்டுள்ள பதிவில், ’’இது என் இதயத்தை உடைப்பதாக இருக்கிறது. ஆனால் என்னவொரு பயணம் நண்பா? என்ன ஒரு கேரக்டர்? உங்களின் பயணம் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு மேலும் வலிமை உண்டாகட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.