யுஜிசி நிர்ணயித்த ஊதியம் கோரி போராடும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்ப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணைப்படி, தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி ஒரு வாரமாக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்து அவர்களை அழைத்து பேச வேண்டிய அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

எந்த உரிமையும் அவர்களுக்குக் கிடையாது

இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டின் இறுதியில்தான் ரூ.20,000 என்ற நிலையை எட்டியது. அதிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும்தான் ஊதியம் வழங்கப்படும். ஊதியம் தவிர விடுப்பு, வருங்கால வைப்புத் தொகை உள்ளிட்ட எந்த உரிமையும் அவர்களுக்குக் கிடையாது. தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்; பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடியும் பயனில்லாததால்தான் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் வாயில் முழக்கப் போராட்டமும், பிப்ரவரி 3ஆம் நாள் முதல் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டமும் மேற்கொண்டு வருகின்றனர்.

கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது எனும் நிலையில், அவர்களை அழைத்து அரசு பேச்சு நடத்துவதுதான் முறையாகும். அதற்கு மாறாக, அவர்களுக்கு எதிராக பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பணி நீக்கம் என்னும் மிரட்டலா?

பல கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப் பட்டிருக்கிறது. இன்னும் பல கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று நேரடியாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறைகள் மூலம் நியாயக்குரல்களை அடக்கி விடலாம் என்று தமிழக அரசு நினைத்தால், அதற்கு தோல்விதான் பரிசாகக் கிடைக்கும் என்பது உறுதி. உண்மையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசுதான் ஐந்தாண்டுகளுக்கு மேலாக துரோகம் இழைத்து வருகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 28.01.2019 ஆம் நாள் ஆணையிட்டது. ஆனால், அந்த உத்தரவு செயல்படுத்தப்படாத நிலையில், அதை எதிர்த்து வழக்கில் கடந்த 21.03.2024ஆம் நாள் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ‘‘கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்று அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், அதை அரசு ஏற்காத நிலையில், மீண்டும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 18ஆம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது. ஆனால், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. இதுதான் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு காரணம் ஆகும்.

கோரிக்கைகளை ஏற்க மறுப்பது நியாயமல்ல பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இந்தியாவில் பல மாநிலங்களில் வழங்கப் படுகின்றன. ஆனால், முற்போக்கு மாநிலம் என்று ஆட்சியாளர்களால் போற்றப்படும் தமிழ்நாட்டில்தான்  நியாயமான ஊதியம் பெறும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் அனைத்தும் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. அரசு கல்லூரிகளில் உள்ள 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலானவை காலியாக  உள்ள நிலையில் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டுதான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் இல்லாமல் கல்லூரிகளை நடத்த முடியாது எனும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பது நியாயமல்ல. எனவே, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதை அரசு நிறுத்த வேண்டும். மாறாக, அவர்களை அழைத்து பேச்சு நடத்தி,  ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.