ஏற்கெனவே இருக்கும் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் அல்லது புதிதாக உருவாக்கப்பட உள்ள பல்கலைக்கழகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக  மேட்டூர் அணை வரும் 12ஆம்  தேதி திறக்கப்பட உள்ளது. இதனால் கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீர், கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல 90 கோடி ரூபாய் செலவில் பாசன ஆறுகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.  


இந்தப் பணிகளை திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 9) ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


தொடர்ந்து செய்தியாளர்களை முதலமைச்சர் சந்தித்துப் பேசினார். அப்போது, கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பல்கலைக்கழகங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்படுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த முதல்வர், ''ஏற்கெனவே இருக்கும் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் அல்லது புதிதாக உருவாக்கப்பட உள்ள பல்கலைக்கழகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும். இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர்


உயர் கல்வி நிலையங்களில் ஆளுநரின் தலையீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ''அமைச்சர் சொன்னது உண்மைதான். அதனால்தான் முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி உள்ளோம்.


டாஸ்மாக் கடைகளைத் தொடர்ந்து குறைப்போம். இந்த ஆண்டு 500 கடைகளை நீக்குவதற்கான பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது'' என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


மேகதாது அணை கட்ட எதிர்ப்பு


கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தற்போது அமைந்துள்ள புதிய காங்கிரஸ் அரசு மட்டுமல்ல, முந்தைய அரசுகளும் அணை கட்டுவோம் என சொல்லியது. அப்போதும் நாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இந்த ஆட்சி அதனைத் தொடர்ந்து செய்யும்’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.