உயர் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளை உருவாக்க உள்ளது. இதற்கான வரைவு மீதான கருத்துகளை நவம்பர் 14ஆம் தேதிக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கண்காணித்து வருகிறது. அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் அடிப்படை வசதிகளை வழங்கவும் புதிய விதிமுறைகளை யுஜிசி உருவாக்க உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜனிஷ் ஜெயின் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’அனைத்து மாணவர்களின் குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பான, வன்முறை அற்ற சூழலை உறுதி செய்ய வேண்டியது கல்வி நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பு ஆகும். இதை உறுதி செய்ய, ஒவ்வொரு காலத்துக்கு ஏற்ற வகையில் பல்வேறு உத்தரவுகள், வழிகாட்டல்கள், ஆலோசனைகளை பல்கலைக்கழக மானியக் குழு வழங்கி வருகிறது.
இந்த முறை, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் அடிப்படை வசதிகளை வழங்கவும் புதிய விதிமுறைகளை யுஜிசி உருவாக்க உள்ளது. இது கொள்கை உருவாக்கம், கண்காணிப்பு மற்றும் குறை தீர்ப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும். 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த விதிமுறை வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
வரைவு மீதான கருத்துகளை, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நவம்பர் 14ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ssiwach.us@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு கருத்துகளைத் தெரிவிக்கலாம்’’.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜனிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
வரைவு குறித்து அறிய: https://www.ugc.ac.in/pdfnews/1105556_WS-Guidelines.pdf
தேசிய கல்விக் கொள்கை அம்சங்கள் அமல்
மத்திய பாஜக அரசு 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதன் அம்சங்கள் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களில் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் விரைவில் இந்தி மொழியில் கற்பிக்கப்பட உள்ளன.
நாட்டிலேயே முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போபாலில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை அக்டோபர் 16ஆம் தேதி அன்று வெளிட்டது குறிப்பிடத்தக்கது.