தமிழக மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்க வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால் மட்டுமே நிதி வழங்க முடியும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகத்தில் பெரும்புயலே கிளம்பியது. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முதலமைச்சர் ஸ்டாலின், தர்மேந்திரபிரதான் திமிராக பேசினால் தமிழர்களின் குணம் என்னவென்பதை காட்ட வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.

இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மும்மொழிக்கொள்கையை சுற்றி தமிழகத்தில் அரசியல் நடந்து வருகிறது. தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

மும்மொழிக்கொள்கையில் இந்தி தான் படிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதில் இந்திய மொழி எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம். அதன் மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறான கருத்து. தாய் மொழி, ஆங்கில மொழி அதனுடன் இந்திய மொழி ஒன்றை கற்க வேண்டும் என்ற அமைப்பிலே மும்மொழிக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இது வருங்காலத்தில் இந்தியாவை கட்டமைக்க உதவும். இந்தி திணிப்பு என்பது மும்மொழிக்கொள்கையின் நோக்கம் இல்லை. மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். தமிழக மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்க வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு உள்ளது” என கேள்வி எழுப்பினார்.