இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பணிச்சுமை, மன அழுத்தம் மற்றும் குடும்ப நெருக்கடிகள் காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநலனில் போதிய கவனம் செலுத்தத் தவறி விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. இச்சூழலை மாற்ற, குழந்தைகளின் மனநலத்தை மேம்படுத்துவதற்கான 10 எளிய வழிகளை யுனிசெஃப் (UNICEF) பரிந்துரைத்துள்ளது.

Continues below advertisement

இது குறித்து யுனிசெஃப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அன்பான கவனிப்பும், அரவணைப்பும் ஒரு குழந்தையின் சமூக மற்றும் உணர்ச்சிக் கையாளும் திறனை வளர்க்கும் வலுவான அடித்தளமாக அமையும். இது அவர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்" என்று தெரிவித்துள்ளது.

யுனிசெஃப் வழங்கும் 10 ஆலோசனைகள்

Continues below advertisement

  1. உறுதுணையாக இருங்கள்: உங்கள் குழந்தைகள் தங்களைத் தனிமையாக உணர விடாதீர்கள். அவர்களுக்குத் தேவைப்படும்போது அல்லது அவர்கள் ஏதேனும் பகிர விரும்பும்போது நீங்கள் எப்போதும் துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்குங்கள்.
  2. உதவி கேட்பது தவறல்ல: பெரியவர்களுக்கே சில நேரங்களில் தனியாகத் தீர்க்க முடியாத சிக்கல்கள் வரும் என்பதை அவர்களுக்குப் புரியவையுங்கள். யாராவது ஒருவரின் உதவியை நாடுவது தவறல்ல என்பதையும், அது ஒரு துணிச்சலான செயல் என்பதையும் உணர்த்துங்கள்.
  3. உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல்: எந்த பாகுபாடும் இல்லாமல் குழந்தைகளின் உணர்வுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் உணர்வுப்பூர்வமாக நெருக்கமாக இருங்கள்.
  4. பகிர்வதை ஊக்குவியுங்கள்: டீன் ஏஜ் எனப்படும் பதின்ம வயது பிள்ளைகள் தங்களது உள்ளக் குமுறல்களையும் உணர்வுகளையும் உங்களிடம் வெளிப்படையாகப் பகிர ஊக்குவியுங்கள்.
  5. நலன் விசாரித்தல்: அவர்களுடன் தினமும் உரையாடுங்கள். அன்றைய நாள் எப்படிச் சென்றது? என்ன செய்தார்கள்? என்பதை அன்புடன் கேட்டறியுங்கள்.

  1. தனிப்பட்ட சுதந்திரம்: பதின்ம வயதுப் பிள்ளைகளுக்குத் தேவையான தனிப்பட்ட நேரத்தையும், சுதந்திரத்தையும் (Space) வழங்கத் தவறாதீர்கள்.
  2. இயல்பான உணர்வுகள்: கவலைப்படுவது, மன அழுத்தத்திற்கு உள்ளாவது அல்லது சோகமாக இருப்பது பதின்ம வயதில் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.
  3. பேசுவது நல்லது: மனதில் இருப்பதைப் பேசுவது சில நேரங்களில் பயமாக இருக்கலாம், ஆனால் பேசுவதே சரியான தீர்வு என்பதை அவர்களுக்குப் புரியவையுங்கள்.
  4. மாற்று வழிகள்: ஒருவேளை உங்கள் பிள்ளைகள் உங்களிடம் பேசத் தயங்கினால், அவர்களுக்குப் பிடித்தமான அத்தை, மாமா, பயிற்சியாளர்கள் அல்லது மருத்துவர்களிடம் பேசப் பரிந்துரைக்கலாம்.
  5. தீர்வு காணுதல்: உங்கள் பிள்ளைகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைந்தால், அவர்களுடன் அமர்ந்து அந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளைப் பற்றிச் சிந்தியுங்கள்.

குழந்தைகளின் மனநலனைப் பேணுவது என்பது அவர்களின் எதிர்கால ஆளுமையை வடிவமைக்கும் மிக முக்கியமான பொறுப்பாகும். பெற்றோர்கள் இந்த எளிய ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும் என யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.