இனி முதுகலை படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது. அதேபோல பிஎச்.டி. படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கவும் யுஜிசி முடிவெடுத்துள்ளது.


நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இனிமேல் முதுகலைப் படிப்பைப் படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, முனைவர் ஆய்வுப் படிப்பான பிஎச்.டி. படிக்க விரும்புவோர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 


இந்நிலையில் பிஎச்.டி. படிப்புக்கான புதிய தகுதிகள் குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


* டிகிரியை வழங்கும் ஒவ்வொரு தன்னாட்சிக் கல்லூரியும் பிற கல்லூரிகளும் பிஎச்.டி. படிப்புகளை வழங்கலாம்.


* 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்பை முடித்து ஓராண்டு / இரண்டு செமஸ்டர்கள் முதுகலைப் படிப்பை முடித்தவர்கள் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் அவர்கள் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 


* இளங்கலைப் படிப்பை முடித்து 2 ஆண்டுகள்/ 4 செமஸ்டர்கள் கொண்ட முதுகலைப் படிப்பை முடித்தவர்களும் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 


* ஆராய்ச்சியுடன் கூடிய 4 ஆண்டுகள் / 8 செமஸ்டர்கள் கொண்ட இளங்கலைப் படிப்பை முடித்தவர்களும் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் 10-க்குக் குறைந்தது 7.5 சிஜிபிஏவைக் கொண்டிருக்க வேண்டும். 


* இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி நான் க்ரீமி லேயர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் 5 சதவீதம் தளர்வு உண்டு. அதாவது மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது. 




* 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்பை முடித்து, பிஎச்.டி. படிக்க விரும்பும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி நான் க்ரீமி லேயர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் 0.5 சிஜிபிஏ தளர்வு உண்டு. அதாவது மேற்குறிப்பிட்டவர்கள் 10-க்குக் குறைந்தது 7.0 சிஜிபிஏவைக் கொண்டிருக்க வேண்டும். 


பிஎச்.டி. படிப்புக்கு நுழைவுத் தேர்வு


* அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேசிய தகுதித் தேர்வு (NET) அல்லது தேசிய நுழைவுத் தேர்வு அல்லது பல்கலைக்கழகங்களே நடத்தும் நுழைவுத் தேர்வின் மூலம் பிஎச்.டி. ஸ்காலர்களை அனுமதிக்க வேண்டும். 


* இதில் 60 சதவீத காலி இடங்கள் நெட் / ஜேஆர்எஃப் நுழைவுத் தேர்வு மூலமும் 40 சதவீத காலி இடங்கள் பல்கலைக்கழகத் தேர்வுகள் மூலமும் நிரப்பப்படும். 


* பிஎச்.டி. படிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தங்களுக்கான இடங்களின் எண்ணிக்கையில் ஸ்காலர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.


* ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள், கல்வி, ஆராய்ச்சி வசதிகள், ஆய்வகம், நூலகம் மற்றும் பிற வசதிகள் ஆகியவற்றைக் கொண்டு பிஎச்.டி. படிப்புக்கான இடங்கள் முடிவு செய்யப்படும். 


* நுழைவுத் தேர்வு கேள்விகள் ஆராய்ச்சி/ பகுத்தறியும் திறன்/ புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறக் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில் எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி நான் க்ரீமி லேயர் வகுப்பினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 5 சதவீத விலக்கு உண்டு.


இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது. 


இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துகளை, பரிந்துரைகளைப் பொதுமக்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் பிஎச்.டி. படிப்பு குறித்த தங்களின் கருத்துகளை https://docs.google.com/forms/d/e/1FAIpQLScV3BWfL4qpE_iVKWJPbMWH5ZAuOdYG_H3ZdMO4o_423VtZCQ/viewform என்ற இணைய முகவரியில் தெரிவிக்கலாம்.