சென்னையில் புயல் பாதிப்பால் பல்கலைக்கழகத் தேர்வுகள் பலவும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், யுஜிசி நெட் தேர்வு நடைபெறுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர். 


மிக்ஜாக் புயல் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கோரத் தாண்டவமாடி விட்டு, ஆந்திராவில் நேற்று கரையைக் கடந்தது. புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் வெள்ளம் தெருவைச் சூழ்ந்து, வீடுகளில் புகுந்தது.


இயல்பு நிலை கடுமையாக பாதிப்பு


இதை அடுத்து, டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. மழை படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, நீர் வடியத் தொடங்கி உள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச. 6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 3 நாட்களாக மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) இன்று (டிச. 6) தொடங்கி, டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று ஆங்கிலம், வரலாறு, இந்தி ஜெர்மனி உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கும் மதங்களுக்கு இடையேயான ஒப்பீட்டு ஆய்வு உள்ளிட்ட பாடத்துக்கும் தேர்வு நடைபெறுகிறது. காலை, மதியம் என 2 ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெறுகிறது. 




மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு


தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட தேர்வு மையங்களில் நெட் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், மழை பாதிப்பு காரணமாக, தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனினும் திட்டமிட்டபடி தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு, மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.


இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமாருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


மத்திய கல்வித் துறை அறியாதா? 


அந்தக் கடிதத்தில், ’’மத்திய அரசின் உயர் கல்வித்துறை யுஜிசி - நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது. மிக்ஜாம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை மத்திய கல்வித் துறை அறியாதா? 


தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்’’ என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.