செலவு செய்வது நாங்கள்; நிர்வகிப்பது நீங்களா? ஏன் வயிற்றெரிச்சல்? யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்.

Continues below advertisement

தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் யுஜிசி வரைவறிக்கை என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

Continues below advertisement

யுஜிசி புதிய வரைவு அறிக்கை விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அதில் யுஜிசியின் புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். கல்வியில் ஒன்றிய அரசு கைவைப்பதாகவும் தமிழக அரசை சிறுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், கடுமையாக யுஜிசியை விமர்சித்து இருந்தார். 

உதவித் தொகை – ஊக்கத் தொகை - கல்விக் கட்டணச் சலுகை

இந்த நிலையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது,

’’கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித் தொகை – ஊக்கத் தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்! இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்!

இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று #UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர் கல்வியின் நிலை?

வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் முயற்சி

தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் #UGC_Draft_Regulations!

இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement