நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டப் படிப்பு திட்டத்தைக் கொண்டுவர உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


உயர் கல்வி நிறுவனங்களில் தொழிற் பயிற்சியுடன் கூடிய பட்டப்படிப்பு முறை கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய முடியும்.


எப்படி தொழில் பயிற்சி?


3 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 1 செமஸ்டருக்கு தொழில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிகபட்சம் 3 செமஸ்டர் வரை பங்கேற்கலாம். அதேபோல 4 ஆண்டு இளநிலை படிப்பை படிப்பவர்கள் 2 முதல் 4 செமஸ்டர்கள் வரை தொழில் பயிற்சியை மேற்கொள்ளலாம்.


30 மணி நேரப் பயிற்சி 1 கிரெடிட் அளிக்கும். ஓராண்டு தொழில் பயிற்சி 40 கிரெடிட்டை மாணவர்களுக்கு அளிக்கும். இது 1,200 மணிநேர கற்றலுக்கு இணையானது ஆகும். அதேபோல 6 மாதகால தொழில் பயிற்சி, 600 மணி நேரக் கற்றலுக்கு இணையானது ஆகும். முக்கியமாக தொழில் பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை (STIPEND) வழங்கப்படும்.


கல்வி நிறுவனங்களுக்கு என்ன தகுதி?


அதேநேரத்தில் பயிற்சியை அளிக்கும் கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதாவது, NIRF தேசிய தரவரிசைப் பட்டியலில் டாப் 200 இடங்களில் ஒன்றைப் பெற்று இருக்க வேண்டும். அல்லது NAAC கவுன்சிலில் ஏ கிரேடைப் பெற்றிருக்க வேண்டும்.


வரைவு அறிக்கையின் அனைத்து அம்சங்களையும்  https://www.ugc.gov.in/pdfnews/5897104_Guidelines-on-Apprenticeship-Embedded-Degree-Programme-(AEDP).pdf என்னும் வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.


கருத்துக் கூற அழைப்பு


யுஜிசி வெளியிட்ட வரைவு அறிக்கை குறித்த பரிந்துரைகள், கருத்துகள், ஆலோசனைகள் குறித்துக் கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால் அவற்றை நவம்பர் 18-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.ugc.gov.in/