யுஜிசி சார்பில் 2025- 26ஆம் ஆண்டில் புதிய கட்டணம் திரும்பப் பெறும் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரத்து செய்தால் முழுமையாகக் கட்டணம் திரும்ப அளிக்கப்பட வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
கல்லூரிகளைக் கண்காணிக்கும் அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு 2025-26 கல்வி ஆண்டுக்கான புதிய கட்டணத் திரும்பப் பெறும் கொள்கையை அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு சேர்க்கையை ரத்து செய்யவும், தங்கள் பணத்தைத் திரும்பப் பெறவும் அதிக கால அவகாசத்தை வழங்குகிறது.
முழு கட்டணமும் கிடைக்கும்
யுஜிசி விதிகளின்படி, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தங்கள் சேர்க்கையை ரத்து செய்யும் அல்லது திரும்பப் பெறும் மாணவர்கள், செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவார்கள். அதேபோல, 2025 அக்டோபர் 31 ஆம் தேதி வரை தங்கள் சேர்க்கையை ரத்து செய்பவர்களுக்கு, செயலாக்கக் கட்டணமாக ரூ. 1,000 கழிக்கப்பட்ட பிறகு கட்டணம் திரும்பப் பெறப்படும்.
யுஜிசி விதிகள் சொல்வது என்ன?
அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகு திரும்பப் பெறும் தொகை, சேர்க்கையின் கடைசி தேதிக்கு எவ்வளவு நெருக்கத்தில் திரும்பப் பெறப்படுகிறது என்பதைப் பொறுத்து, முந்தைய யுஜிசி வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நிர்ணயிக்கப்படும். மாணவரின் கோரிக்கையைப் பெற்ற 15 நாட்களுக்குள், கல்லூரிகள் தாங்கள் பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கே திரும்ப அளிக்க வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
சேர்க்கையின்போது மாணவர்களின் அசல் சான்றிதழ்களை எந்த நிறுவனமும் வைத்திருக்கக் கூடாது என்று யுஜிசி அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு தேவைகளுக்காக சுய சான்றளிக்கப்பட்ட (self attested copies) நகல்களை மட்டுமே கல்லூரிகள் பெற வேண்டும்.
மாணவர்கள் புகார்
கட்டணங்களைத் திரும்பப் பெறாதது அல்லது செயல்முறையை தாமதப்படுத்துவது குறித்து பல மாணவர்கள், கல்லூரிகள் மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து யுஜிசி அறிவிப்பு வெளியாகி உள்ளது. யுஜிசியின் புதிய விதிகள் இந்த அமைப்பை மேலும் வெளிப்படையானதாகவும், மாணவர் நட்புறவு கொண்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இவற்றை மீறும் எந்தவொரு நிறுவனமும் யுஜிசியிடம் இருந்து கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான முழு விவரங்களை யுஜிசி வெளியிட்ட https://www.ugc.gov.in/pdfnews/1857727_Fee-Refund-Policy-2025-26.pdf என்ற அறிவிக்கையை க்ளிக் செய்து காணலாம்.