பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனம், பேராசிரியர் தெரிவு செய்வது, கல்வித் தகுதிகள், பதவி உயர்வு ஆகியவற்றில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் மாற்றங்களை மேற்கொள்ளப்படும் என்று யுஜிசி அறிவித்தது கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து, வரைவறிக்கை மீது கருத்துக் கூற அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, UGC (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) வரைவு விதிமுறைகள், 2025-ஐ ஜனவரி 6ஆம் தேதி அன்று வெளியிட்டது. இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கருத்துகள்/ பரிந்துரைகளைத் தெரிவிக்கலாம் என்று யுஜிசி அழைப்பு விடுத்தது.
துணை வேந்தர் நியமனத்தில் புதிய பரிந்துரைகள்
இதில் துணை வேந்தர் நியமனம் குறித்த புதிய பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவின் (Search- cum- Selection Committee) தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என்று யுஜிசி தெரிவித்தது.
மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக சிண்டிகேட் அல்லது செனட் அல்லது நிர்வாகக் குழு அல்லது மேலாண்மை உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்றும் யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம்
இந்த நிலையில் யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரைவறிக்கை மீது ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் கருத்துக் கூறலாம் என்று தெரிவித்து இருந்த யுஜிசி, அதற்கு பிப்ரவரி 5 வரை அவகாசம் அளித்து இருந்தது. எனினும் பங்கேற்பாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் இந்த வரைவறிக்கை மீது பிப்ரவரி 28ஆம் தேதி வரை கருத்துக் கூறலாம்.
இதுதொடர்பான விவரங்களை https://www.ugc.gov.in/pdfnews/1461139_Regulations-2025-Feedback_.pdf என்ற இணைப்பில் அறியலாம்.
கருத்துத் தெரிவிப்பது எப்படி?
பங்கேற்பாளர்கள் தங்களின் கருத்துகளை, ஆலோசனைகளை, ஆட்சேபனைகளை draft-regulations@ugc.gov.in என்ற இ- மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.