பிஎச்டி படிப்பில் ஆராய்ச்சி மாணவர்களை அனுமதிக்க 3 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தடை விதித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 2025- 26ஆம் கல்வி ஆண்டு முதல் 2029-30 வரை இந்த உத்தரவு செல்லுபடி ஆகும்.

Continues below advertisement

எந்தெந்த பல்கலைக்கழகங்கள்?

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 3 பல்கலைகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  1. OPJS பல்கலைக்கழகம், சுரு, ராஜஸ்தான்
  2. சன்ரைஸ் பல்கலைக்கழகம், அல்வார், ராஜஸ்தான்
  3. சிங்கானியா பல்கலைக்கழகம், ஜுன்ஜுனு, ராஜஸ்தான்

எதனால் இந்தத் தடை?

யுஜிசியின் பிஎச்.டி. முனைவர் விதிமுறைகளைப் பின்பற்றாததாலும் கல்வி வழிமுறையைகளை முறையாக நிறைவேற்றாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

"நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பித்த தகவல், தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்த பிறகு, நிலைக்குழு மூன்று பல்கலைக்கழகங்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றுக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

நிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை

இந்த பல்கலைக்கழகங்களுக்கு ஏன் விதிமுறைகளை சரிவரப் பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டு, பதிலளிக்க அவகாசமும் அளிக்கப்பட்டது. எனினும் அந்த பல்கலைக்கழகங்கள் சரிவர பதிலளிப்பதில் தோல்வி அடைந்துவிட்டன. அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்க நிலைக் குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதனால் இனியில் இருந்து மாணவர்களும் பெற்றோர்களும் இந்த பல்கலைக்கழகங்களில் பிஎச்.டி. படிப்பில் சேர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

முனைவர் பட்டம் பயன்படாதா?

பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் இல்லாமல், பிஎச்டி பட்டம் வழங்கினால் அது செல்லாது. உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு அந்த முனைவர் பட்டம் பயன்படாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.