நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவர்கள், பேராசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக "ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி" என்ற பொருள்படும் #harghartiranga இந்தி ஹேஷ்டேகைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவுகள் இட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, 'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் தேச பக்தி விழிப்புணர்வுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த பிரச்சாரம் ஓராண்டாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' திருவிழாவின் ஒரு பகுதியாக 'ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி' என்ற பொருள்படும் 'ஹர் கர் திரங்கா' (har ghar tiranga) பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
அதில், ''மத்தியக் கலாச்சாரத்துறை அமைச்சகம் https://harghartiranga.com/ என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இதில், மக்கள் தேசியக் கோடியை ஏற்றி, அதனுடன் செல்ஃபி எடுத்து அதைப் பதிவேற்றலாம்.
மாணவர்கள், பேராசிரியர்கள் ஊழியர்கள் மத்தியில் இந்த இணையதளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் #harghartiranga என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி பதிவுகள் இட வேண்டும்.
ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை அதிக அளவிலான இந்தியர்கள், தங்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்