தமிழ்நாட்டில் இடைநிலைக் கல்வியில் 2024ஆம் ஆண்டில் எந்த ஒரு மாணவரும் இடையில் நிற்காமல், படிப்பை முடித்திருப்பதாக மத்திய அரசின் யுஐடிஎஸ்இ புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2019ஆம் ஆண்டு, மாணவர்கள் படிப்பை முடிப்பது 99 சதவிகிதம் ஆக இருந்த நிலையில், 2024-ல் 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாணவிகளின் சதவீதம் 2019-ல் 97.5 ஆக இருந்த நிலையில், 2024-ல் 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது 10 பேர் நடுநிலைக் கல்வியில் சேர்ந்தால், 10 பேரும் நடுநிலைக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர்.


குறைந்த இடைநிற்றல் வீதம்


அதேபோல உயர்நிலைக் கல்வியைப் பொறுத்தவரை மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. 2019-ல் 81.3 ஆக இருந்த மாணவரின் எண்ணிக்கை வீதம், 2024-ல் 89.2 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாணவிகளின் எண்ணிக்கை 89.4-ல் இருந்து 95.6 ஆக அதிகரித்துள்ளது.


இதன்மூலம் மாணவர்களுக்கான இடைநிலைக் கல்வியில் 2019-ல் 4ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2024ஆம் ஆண்டில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. மாணவிகளுக்கான கல்வியில், 2019-ல் 7ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேபோல உயர்நிலைக் கல்வியில் மாணவர்கள் படித்து முடிப்பதில் 2019ஆம் ஆண்டு, தமிழ்நாடு 8ஆவது இடத்தில் இருந்தது. எனினும் தற்போது 2024-ல் 4ஆவது இடத்துக்கு வந்துள்ளது. மாணவிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், 4ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.


இடைநிற்றல் இல்லாத சூழல்


இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, ‘’முதலமைச்சர் வழிகாட்டுதலில் நம்முடைய பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் இடைநிற்றல் இல்லாத சூழலை உருவாக்க தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை - பலன்களை நிரூபிக்கும் வகையில் ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் அமைந்துள்ளன.


தமிழ்நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் எனும் நம் முதலமைச்சரின் கனவை தொடர்ந்து நிறைவேற்றுவோம்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


பிஹார், அசாம் மாநிலங்களில் மிகவும் மோசம்


அதே நேரத்தில் பிஹார், அசாம் ஆகிய மாநிலங்களில் மிகவும் மோசமாக மாறி உள்ளன. அங்கு உயர்நிலைக் கல்வியில் 2019ஆம் ஆண்டை விட, 2024ஆம் ஆண்டு இடைநிற்றல் வீதம் அதிகரித்து உள்ளது.