தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் (நவம்பர் 12 மற்றும் 13) நடைபெற இருந்த தட்டச்சுத் தேர்வுகள் கன மழை காரணமாக நவம்பர் 19, 20 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் மூலம் டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள் நடக்கிறது. இளநிலை, முதுநிலை என்ற இரு நிலைகளில் இத்தேர்வுகள் நடக்கின்றது ஒவ்வொரு தேர்வும் இரு நிலைகளில் தாள் -1, தாள்-2 என இரண்டு தாள் முறையில் நடக்கின்றன. 


இந்தத் தேர்வுகள் கடந்த 75 ஆண்டுகளாக தாள்-1 ஸ்பீடு தேர்வாகவும், தாள்-2 ஸ்டேட்மென்ட் மற்றும் லெட்டர் தேர்வாகவும் நடைபெற்று வந்தது. அதாவது ஒன்றாவது தாள் வேகத்தின் அடிப்படையிலும், இரண்டாவது தாள் கடிதம் மற்றும் அறிக்கை அடிப்படையில் இருக்கும்.


இந்த நிலையில், இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு தாள்-1 கடிதம் மற்றும் அறிக்கை தேர்வாகவும், தாள்- 2 வேகத் தேர்வாகவும் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.


இந்த புதிய தேர்வு நடைமுறையை ரத்து செய்து, 75 ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வரும் பழைய தேர்வு நடைமுறை அடிப்படையில் தட்டச்சு தேர்வுகளை நடத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு டைப்ரைட்டிங் - சுருக்கெழுத்து கணினி பயிற்சி மைய சங்கத் தலைவர் சோம.சேகர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் "வேகமாக டைப்பிங் செய்வதை இரண்டாவதாக மாற்றி உள்ளதால் தேர்வர்கள் மனதளவில் பெரிதும் பாதிப்பர். திடீரென மாற்றியுள்ளதால் தேர்வர்களின் திறன் பாதிக்கும். எனவே, இந்த தேர்வை முந்தைய நடைமுறையை பின்பற்றி நடத்த வேண்டுமென்று உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். 


இதனை தனி நீதிபதி விசாரித்து, புதிய தேர்வு முறைக்கு தடை விதித்து, பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டார்.




இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்து, ''தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி தட்டச்சு தேர்வை புதிய முறைப்படி (தாள் 1- கடிதம் மற்றும் அறிக்கை தேர்வு, தாள் 2- வேகத் தேர்வு) நவம்பர் 13 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். 


இதை அடுத்து தொழில்நுட்பக் கல்வி தேர்வுகள் வாரியத் தலைவர், நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தட்டச்சுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தார். இந்தத் தேர்வு நாளை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் (நவம்பர் 12 மற்றும் 13) நடைபெற இருந்த தட்டச்சுத் தேர்வுகள் கன மழை காரணமாக நவம்பர் 19, 20 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.