ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளின் இறுதி விடைக் குறிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதை எப்படி அறிந்துகொள்வது என்று தெரிந்துகொள்ளலாம். 


அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.


இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 4,01,886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌.




அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19 வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான விடைக் குறிப்புகள் அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகின. 31.10.2022 பிற்பகல்‌ 5.30 மணி வரை தேர்வர்கள்‌ இணையவழியில்‌ தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 


அதன்‌ அடிப்படையில்‌ பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும்‌ பாடவாரியாக வல்லுநர் குழு
அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பின்‌ பாட வலலுநர் குழுவால்‌ இறுதி செய்யப்பட்ட விடைக் குறிப்புகளின்‌ அடிப்படையில்‌ தேர்வர்களது கணினி வழித்‌ தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள்‌ கணக்கிடப்பட்டன.


தற்பொழுது இறுதி விடைக் குறிப்புகள் இன்று (டிசம்பர் 7) வெளியாகி உள்ளன. தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ இறுதி விடைக்குறிப்புடன்‌ வெளியிடப்படுகிறது. 


தேர்வர்கள்‌ http://www.trb.tn.nic.in/TET_2022/07122022/Final%20key.pdf என்ற முகவரி மூலம் இறுதி விடைக் குறிப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.