குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.  


இதன்படி குரூப் 4 தேர்வுகள், 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகின்றன. அதேபோல, குரூப் 1 தேர்வு 90 காலி இடங்களை நிரப்ப, ஜூலை 13ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையருக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1பி தேர்வு, ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி நிரப்பும் குரூப் 1 சி தேர்வும் அதே தேதியில் நடைபெற உள்ளது. 


இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு; எழும் கேள்விகள் என்னென்ன?


 



ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு (நேர்காணல் பணியிடங்கள்), ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. 2030 பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 28ஆம் தேதி இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.


அதேபோல ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு (நேர்காணல் அல்லாத பணியிடங்கள்), அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. 605 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வு 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. நீதித் துறையில் உதவி அரசு வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. 50 பணியிடங்கள் இந்தத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 


இதையும் வாசிக்கலாம்:  TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?


உத்தேச அட்டவணை மட்டுமே!


எனினும் இந்தத் தேர்வு அறிவிப்பு குறித்த அட்டவணை உத்தேசமானது மட்டுமே. சூழலுக்கு ஏற்ப இந்தத் தேதிகளில் மாற்றம் இருக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. உடனடி தகவலை அறிய, தமிழ்நாடு அரசுப் பணியாள தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காண வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 


திருத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை குறித்த முழுமையான தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/static_pdf/annualplanner/Annual%20Planner_2024_Revised.pdf  என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்து காணலாம்.