கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-II பணிக்கான நேர்முகக் தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-II, 2013-2018 பதவிக்கான நேர்முகத் தேர்வானது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மேற்கூறிய பதவிக்கான நேர்முகத் தேர்வானது வருகின்ற 19.07.2021 முதல் 24.07.2021 வரை (21.07.2021 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்கூறிய நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேதி மற்றும் நேரமானது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
2013-18-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணிகளில் அடங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - II பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்றது. 110 காலிப் பணியிடங்களுக்கு 1,328 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், நேர்காணல் தேர்விற்குத் தற்காலிகமாக 226 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அஇப்பணிக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும், தானியங்கி பொறியியலில் பட்டயப் படிப்பு, இயந்திரப் பொறியியலில் பட்டயப் படிப்பு போன்ற ஏதாவது ஒரு பாடப் பிரிவில் மூன்று வருடம் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும்,பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் களரக பயணிகள் மோட்டார் வாகனங்களை பழுதுப்பார்க்கும் தானியங்கி பணிமனையில் வருடத்திற்கும் குறையாமல் முழு நேரமும் வேலை செய்த செயல்முறை அனுபவம் மற்றும் மோட்டார் வாகனம், கனரக வாகனம் மற்றும் கனரக பயணிகள் மோட்டார் வாகனங்களை இயக்கக்கூடிய ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக போக்குவரத்து வாகனங்களை ஓட்டிய செயல்முறை அனுபவம் ஆறு மாதத்திற்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், படிக்க:
ICT Awards | தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு மத்திய அரசு விருது : யார் யார் தெரியுமா?