குரூப் 4 காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்று டிஎன்பிஎஸ்சி பதில் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள பதிவுகளின்படி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது என்றே தெரிகிறது.

Continues below advertisement


இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறும்போது, ‘’ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் IV பணிகள்) 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முதலாக தேர்வர்களின் நலன் கருதி தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


ஒப்பிட இயலாது


எனவே ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் IV பணிகளுக்கான தேர்விற்கு 2025 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை, 2025 ஆண்டிற்கு முன்பு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட இயலாது’’ என்று தெரிவித்துள்ளது.


அதேபோல டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ’’ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் IV பணிகள்) அரசு அலுவலர்களின் ஓய்வு பெறும் வயது 2020ஆம் ஆண்டு 59 ஆகவும், 2021ஆம் ஆண்டு 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


எனவே ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் IV தேர்வின் மூலம் 2025-ஆம் ஆண்டு பணிகளின் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை, 2020ஆம் ஆண்டிற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட இயலாது’’ என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


காலி பணி இடங்களின் எண்ணிக்கை


அந்த வகையில், முதல்முறையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டதாகவும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனால் காலி பணி இடங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கப்படாது என்றே தெரிகிறது.


குரூப் 4 தேர்வும் தேர்வு முடிவுகளும்


முன்னதாக, தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 935 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜுலை மாதம் 4ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செப்டம்பர் மாதம், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் காலியிடங்கள் 4,662 ஆக உயர்ந்தன.


பின்னர் அக்டோபர் 22ஆம் தேதி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தன. தற்போது சான்றிதழ் பதிவேற்றத்துக்கான அவகாசம் நவம்பர் 7ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.