குரூப் 4 காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்த்தப்படுமா என்ற கேள்வி குறித்து, டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி 6,244 குரூப் 4 காலி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து ஜூன் 18ஆம் தேதி தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகின.
அக்டோபர் 28 வெளியான தேர்வு முடிவுகள்
தொடர்ந்து தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 92 வேலை நாட்களில் வெளியிட்டு அசத்தியது.
போதாதற்கு குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையும் 9491 ஆக உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் 6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
9491 ஆக அதிகரிப்பு
இதன் மூலம் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலி இடங்களின் எண்ணிக்கை, 6,724 ஆக உயர்ந்தது. தேர்வு முடிவு வெளியான நிலையில், அன்றே மீண்டும் காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம், மொத்த இடங்களின் எண்ணிக்கை 9491 ஆக அதிகரித்தது. மொத்தத்தில் 3,247 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பு மையத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படுமா என்று அதிக முறை கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி பதிலளித்துள்ளது. இதுபற்றி இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
’’காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா?
அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6244-ல் இருந்து 3247 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 9491 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’’
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனி குரூப் 4 காலி இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
மாற்றுத் திறனாளி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுமா?
அதேபோல அறிவிக்கை தேதிக்கு முன்னர் உரிய படிவத்தில் பெறப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.