குரூப் 4 தேர்வில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு நியமன ஆணை தொடர்பாக முக்கிய அப்டேட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அன்று நடைபெற்றது. தேர்வை எழுத 20,37,101 பேர் விண்ணப்பித்தனர். அதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். எனினும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 4,45,345 பேர் எழுதவில்லை. 15,91,429 பேர் எழுதினர்.
சுமார் 16 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின. அதே நாளில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரலாற்றிலேயே முதல்முறையாக குறைந்த நாட்களிலேயே வெளியிடப்பட்டன.
ஜன.22 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு
தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது.
குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு முதல்கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மார்ச் 28ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (குரூப் 4 பணிகள்) அறிவிக்கை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
நியமன ஆணை தொடர்பாக யாரை தொடர்புகொள்ள வேண்டும்?
இந்த நிலையில், கலந்தாய்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் நியமன ஆணை தொடர்பாக யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
கலந்தாய்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் நியமன ஆணை தொடர்பாக, தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள தெரிவு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன அலுவலரின் அலுவலகத்தை (office of the appointing authority) தொடர்புகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.