தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சான்றிதழ் பதிவேற்றத்தை முடிக்க இன்றே (நவம்பர் 7ஆம் தேதி) கடைசி ஆகும். முன்னதாக இதை மேற்கொள்வது எப்படி என்று டிஎன்பிஎஸ்சி வழிமுறைகளை வெளியிட்டு இருந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு குறித்து ஏப்ரம் 25ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த குரூப் 4 தேர்விற்கான முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட (வனக்காப்பாளர். ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் பழங்குடி இளைஞர் பதவிகள் நீங்கலாக) தேர்வர்களின் பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்டது.
இன்றே கடைசி
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 29.10.2025 முதல் 07.11.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டது. அந்த வகையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
எனினும் சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் தெரிவின் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்பதால், மீதமுள்ளோரும் உடனடியாக தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறினால், அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாது என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசமும் வழங்கப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவலுக்கு: https://www.tnpsc.gov.in/