டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய இன்றே (நவம்பர் 21) ஆகும்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கை ஆண்டின் ஆரம்பத்தில் வெளியானது. ஜூன் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வை எழுத 20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 4,45,345 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வை 15,91,429 பேர் எழுதினர்.


9,491 காலிப் பணியிடங்கள்


இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின. குறிப்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக 92 வேலை நாட்களில் தேர்வு முடிவுகள் அதி விரைவாக வெளியிடப்பட்டன. அதே நாளில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது.


இந்த நிலையில் ஒரே தேர்வுதான் என்பதால், தேர்வில் அதிக கட் ஆஃப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவம்பர் 21ஆம் தேதி கடைசி என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தொடர்ந்து, தேர்வர்களின் பெயரில் தவறு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட ஒதுக்கீடு கோருவோருக்கான சான்றிதழ்கள் பெறுவது எப்படி, தகுதியான அலுவலர்கள் யார், கணினி வழித் திரை சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழ் வழியில் கல்வி பயின்றோர் சான்றிதழ் என்பன உள்ளிட்ட விவரங்களை தினந்தோறும் டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.


இன்றே கடைசி


இந்த நிலையில், தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது கூறி இருந்த சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இன்றே (நவம்பர் 21) கடைசித் தேதி ஆகும்.


கூடுதல் தகவல்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ தளமான https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கணக்கு தொடங்கப்பட்டது. இதில் குரூப் 1, 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கைகள், தேர்வு தேதிகள், பிற தேர்வுகள் விவரம், தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு குறித்த பல்வேறு அப்டேட்டுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேபோல டெலிகிராம் சேனலிலும் தேர்வு அப்டேட்டுகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.