அரசுத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம்.
2022 தேர்வு
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வெளியாகி இருந்தால் அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தேர்வு முடிவுகள் தாமதமாகின. எனினும் காலிப் பணியிடங்கள் 10,117 ஆக உயர்த்தப்பட்டன.
2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. கலந்தாய்வு தொடங்கத் தாமதமான நிலையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து, தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஜூன் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு
தொடர்ந்து கடந்த மாதம் 2023ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இன்னும் இரண்டே நாட்கள்
தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. அதாவது தேர்வர்கள் பிப்.28ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://apply.tnpscexams.in என்ற TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்யவும்.
* ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை பதிவிட்டு உள்ளே செல்லவும்.
* முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள், அதற்கு ஏற்றவாறு முன்பதிவு செய்தபிறகே விண்ணப்பிக்க முடியும்.
* அல்லது https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம்.
எனினும் விண்ணப்பிக்கும் முன்னால், குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையை https://www.tnpsc.gov.in/Document/tamil/1_2024-Tam.pdf என்ற இணைப்பில் முழுமையாக வாசித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி-ன் முக்கியத் தேர்வுகளில் ஒன்றான குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.