மாநிலம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 12) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வினாத்தாள் எதுவும் கசியவில்லை எனவும் தேர்வு பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது எனவும் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ சார்பில் நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 4 (குரூப் 4) அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகைத் தேர்வு 12.07.2025 அன்று முற்பகல்‌ நடைபெற உள்ளது.

13.89 லட்சம் பேர் எழுதும் தேர்வு

இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 4,922 தேர்வுக்‌ கூடங்களில்‌ எழுதுகின்றனர்‌.

இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌, இணை ஒருங்கிணைப்பாளராகவும்‌ செயல்படுவார்கள்‌. தேர்வினை கண்காணிக்கும்‌ பொருட்டு துணை ஆட்சியர்‌ நிலையில்‌ பறக்கும்‌ படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌ ஒவ்வொரு தேர்வுக்‌ கூடத்திற்கும்‌ ஆய்வு அலுவலர்‌ ஒருவரும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ மூலம்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

உரிய பாதுகாப்பு நடவடிக்கை

தேர்வு தொடர்பான மந்தணப்‌ பொருட்கள்‌ உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப்‌ பின்பற்றி அரசு கருவூலங்களில்‌ பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மொத்தமுள்ள 4,922 தேர்வுக்‌ கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ அறை கண்காணிப்பாளர்கள்‌ (20 தேர்வர்களுக்கு ஒருவர்‌) நியமிக்கப்பட்டுள்ளனர்‌. தேர்வின்போது‌ அனைத்து நடவடிக்கைகளும்‌ Videograph செய்ய உரிய ஏற்பாடுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்களின்‌ பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக்‌ கூடத்திற்கும்‌ காவலர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

மேலும்‌ இன்று தடையில்லா மின்சாரம்‌ வழங்குவதற்கு மின்‌வாரியத்‌ துறைக்கு உரிய அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின்‌ உடல்‌ நலன்‌ கருதி உரிய மருத்துவ உதவிகள்‌ வழங்க சுகாதாரத் துறைக்கு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டில்‌ உள்ள முக்கிய அறிவுரைகள்‌ மற்றும்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்‌, வினாத்தாள்‌ மற்றும்‌ விடைத்தாளில்‌ குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும்‌ முறையாக பின்பற்றுமாறும்‌, அதில்‌ குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச்‌ சாதனங்கள்‌ மற்றும்‌ வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும்‌ கொண்டு செல்லக்‌ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வினாத்தாள் கசிந்ததா?

குரூப் 4 தேர்வையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. அதேபோல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்தும் வினாத்தாள்கள் தனியார் பேருந்து மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிந்ததாகத் தகவல் வெளியானது. எனினும் இதை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது. வினாத்தாள்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் எனினும் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்டது குறித்து விளக்கம் கோரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.