குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு தொடங்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், சான்றிதழ்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 


குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படுகிறது. தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேர்வை நடத்துகிறது. 


ஜூனில் தேர்வு; அக்டோபரில் முடிவு


2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகின. அதே நாளில் , காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது.


2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு


தொடர்ந்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கின. இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தேசமாகத் தொடங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 


தேர்வு குறித்த அட்ட்வணை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/