சேலம் மாவட்டத்தில் குரூப் 4 விடைத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் பிரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் வெளியே எடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு, டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்வு எப்போது நடந்தது?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 4,922 தேர்வுக்‌ கூடங்களில்‌ எழுதினர்‌. சென்னையில் 312 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்தத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு, கொள்குறி வகையில் ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற்றது. தமிழ் பாடத்துக்கு 100 மதிப்பெண்கள், பொது அறிவு மற்றும் மனத்திறன் சோதனைக்கு 100 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு தேர்வு ஒரே கட்டமாக நடந்தது. 

விடைத் தாள் பெட்டிகள் பிரிப்பு?

இந்த நிலையில், தேர்வன்றே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. எனினும் அதற்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் குரூப் 4 விடைத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் பிரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் வெளியே எடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகின. 

எனினும் இதற்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில், விடைத் தாள்கள் எதுவும் இல்லை எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

14ஆம் தேதியே சென்னை வந்த விடைத் தாள்கள்

12ஆம் தேதி தேர்வு நடந்து முடிந்ததும், 14ஆம் தேதியே விடைத்தாள்கள் அனைத்தும் ட்ரங்க் பெட்டிக்குள் வைத்து, பாதுகாப்பாக சென்னை கொண்டு வரப்பட்டன. இங்கே எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

உடைக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் என்ன ஆவணங்கள் இருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.