அரசுத் துறைகளில் உள்ள 6,151 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.


ஜனவரியில் தேர்வு முடிவுகள்


அதே 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.


இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகின. முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள், 2024 ஜனவரி மாதம் வெளியாகின. எனினும் குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது.


நேர்முகத் தேர்வு அல்லாத 5,990 இடங்கள் 


குரூப் 2 ஏ பணியிடங்களைப் பொறுத்தவரை 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாகவும் 5,990 காலி இடங்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களாகவும் பிரிக்கப்பட்டன. இதில் முதன்மைத் தேர்வை எழுதியவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் ஆக இருந்தது.


இதற்கிடையே நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான (OT post) 161 பணியிடங்களை நிரப்ப, 483 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் 327 பேர், 102 பேர் என 2 கட்டமாக அழைக்கப்பட்டனர். எனினும் மொத்தமுள்ள 161 இடங்களில் சிறப்புத் துறை உதவியாளர் (Special Branch Assistant) பிரிவில் மட்டும் 29 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.


இதனால் நேர்முகத் தேர்வு அல்லாத (Non OT post) பணியிடங்களுக்கான மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து மதிப்பெண்களையும் தரவரிசைப் பட்டியலையும் வெளியிடவேண்டும் என்று தேர்வர்கள் இந்திய அளவில் ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்கினர். குரூப் 2 தேர்வு முடிவுகளைப் போல, இதற்கும் தாமதமாவதாகத் தேர்வர்கள் வேதனை தெரிவித்தனர். 


இதைத் தொடர்ந்து குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’குரூப் 2 ஏ பதிவுக்கு 5,990 காலி இடங்கள் உள்ள நிலையில், 5:2:1 என்ற விகிதத்தில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால், தேவையான 5,990 காலி இடங்களில் இரு மடங்கு தேர்வர்கள், அதாவது 14,517 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.


காண்பது எப்படி?


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/  என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.