குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


குரூப் 2 தேர்வு அறிவிக்கை


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு ॥ எனப்படும் குரூப் 2 ஏ-ல் அடங்கிய பதவிகளின்‌ நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையை 20.06.2024 அன்று தேர்வாணைய வலைதளத்தில்‌ வெளியிட்டது.


இதற்கான முதல்நிலை எழுத்துத்‌ தேர்வு 14.09.2024 அன்று முற்பகல்‌, 38 மாவட்ட மையங்களில்‌ நடைபெற்றது. இத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 7,93,966 தேர்வர்களில்‌ 5,83,467 தேர்வர்கள்‌ தேர்வு எழுதினர்‌.


2,006 பணியிடங்கள் காலி


குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்காக 21,822 பேர் முதன்மைப் தேர்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற்றன.


குறிப்பாக குரூப் 2ஏ தேர்வுகளுக்கான முதல் தாள் பிப். 2ஆம் தேதி முற்பகலில் நடைபெற்றது. அதேபோல குரூப் 2 ஏ இரண்டாம் தாள் பிப்ரவரி 8ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வு கொள்குறி வகையில் நடைபெற்றது.






தேர்வு முடிவு எப்போது?


இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்வுகளின் முடிவுகள் மே மாதம் வெளியாகலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


மாநில அரசின் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள், குரூப் 1, 2, 3, 4 என பலவகையான தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு, நிரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.