குரூப் 2ஏ மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ள தேர்வர்கள், இந்திய அளவில் #Release_Group2A_Marks, #WeWantGroup2Aranklist ஆகிய ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


அரசுத் துறைகளில் உள்ள 6,151 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.


11 லட்சம் பேர் விண்ணப்பம்


அதே 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.


இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகின. முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள், 2024 ஜனவரி மாதம் வெளியாகின.


இந்த நிலையில் குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்துத் தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


என்னதான் பிரச்சினை?


குரூப் 2 ஏ பணியிடங்களைப் பொறுத்தவரை 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாவும் 5,990 காலி இடங்கள், நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களாகவும் பிரிக்கப்பட்டன. இதில் முதன்மைத் தேர்வை எழுதியவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் ஆக இருந்தது.


இதற்கிடையே நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான (OT post) 161 பணியிடங்களை நிரப்ப, 483 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் 327, 102 என 2 கட்டமாக அழைக்கப்பட்டனர். எனினும் 161 இடங்களில் சிறப்புத் துறை உதவியாளர் (Special Branch Assistant) பிரிவில் மட்டும் 29 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் நேர்முகத் தேர்வு அல்லாத (Non OT post) பணியிடங்களுக்கான மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலும் வெளியாகவில்லை. இதையடுத்து மதிப்பெண்களையும் தரவரிசைப் பட்டியலையும் வெளியிடவேண்டும் என்று தேர்வர்கள் இந்திய அளவில் ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


இதுகுறித்து அரவிந்த் குமார் என்னும் தேர்வர்கள், ஏபிபி நாடுவிடம் கூறியதாவது:


’’நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களில் 29 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காவல்துறையில் சிறப்புப் பிரிவு உதவியாளர் பணியைக் காட்டிலும் முக்கியமான வேலைகளைத் தேர்வு செய்யலாம் என்று தேர்வர்கள் நினைத்துள்ளனர்.


நேர்முகத் தேர்வு அல்லாத 5,990 பதவியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தேர்வு செய்யப்பட்டவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.


என்ன காரணம்?


பொதுவாக குரூப் 2ஏ தேர்வு குரூப் 4 தேர்வைப் போல ஒரே தேர்வாக மட்டும் இருக்கும். ஆனால் தற்போது குரூப் 2 தேர்வைப் போல, முதல்நிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வு (விவரிக்கும் வகையிலான தேர்வு, கட்டாயத் தமிழ் மொழித் தகுதித்தேர்வு), நேர்காணல் என்று மாற்றப்பட்டுவிட்டது. அதிலும் குரூப் 2ஏ தேர்வு, குரூப் 2 தேர்வு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரே தேர்வாக மாற்றி அமைத்ததுதான் பிரச்சினை.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் போல ஒரே நேரத்தில் விடைத்தாள்களை முழுவதும் திருத்தம் செய்வதில்லை. இதனால் தேர்வைத் தனித்தனியாக வைக்க வேண்டும்.


தேர்வு தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தை சரியாக அறிவிக்க வேண்டும்.


துறைசார்ந்து மாற்றங்களைக் கொண்டு வரும்போது நடைமுறைக்கு ஏற்றவாறும் சாத்தியமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’’.


இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார்.


ஓர் அரசுத் தேர்வின் நடைமுறையில் தாமதத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வது தேர்வர்களின் உரிமை. அதுவே இங்கு மறுக்கப்படுகிறது. பின் எதற்கு இந்த Grievance System என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிவ ஏகநாதன் என்னும் தேர்வர்.


காக்க வைப்பதில் என்ன காரணம்?


அவர் மேலும் கூறும்போது, ’’ அடிப்படையே தவறாக இருப்பின் வெளிப்படைத்தன்மை ஒரு காலத்திலும் சாத்தியமில்லை. ஒரே தேர்வு அறிவிக்கையில் உள்ள 4 வெவ்வேறு துறைகளில் இருக்கும் ஒரே பதவிக்கான கலந்தாய்வை ஒன்றாக நடத்தாமல், நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் நடத்தி பணியாணை வழங்கிவிட்டு பிற துறைகளுக்கு நடத்தாமல் காக்க வைப்பதில் என்ன காரணம் என்று டிஎன்பிஎஸ்சி உடனடியாக பதில் சொல்ல வேண்டும்’’ என்று சிவ ஏகநாதன் தெரிவித்துள்ளார்.


டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி அமைப்புக்குத் தலைவர் இன்னும் நியமிக்கப்படாத சூழலில், பல்வேறு தேர்வு அறிவிப்புகள், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரூப் 2 ஏ தேர்வர்களின் கோரிக்கைக்கு, டிஎன்பிஎஸ்சி செவிசாய்க்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.