குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்கான நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய  எச்சரிக்கை விடுத்துள்ளது. 


நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியாகி உள்ளன. குறிப்பாக, நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_MAINS_OT_PUB_LIST_2K24.pdf என்ற இணைப்பைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். 


இந்த நிலையில், தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளதாவது:


* தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் குறித்துத் தனிப்பட்ட வகையில் எந்த கடிதலும் தபாலில் அனுப்பப்படாது.


* எனினும் சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் உளிட்ட விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாகவும் இ-மெயில் மூலமாகவும் அனுப்பப்படும். குறிப்பாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், இ மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.


* அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைத் தேர்வர்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதே நேரத்தில் தொழில்நுட்பக் காரணங்களாலோ, தவறான மொபைல் எண் அல்லது இ மெயில் காரணமாகவோ தேர்வருக்கு செய்தி சென்று சேராவிட்டால், அதற்கு டிஎன்பிஎஸ்சி பொறுப்பேற்காது.


தேர்வர்களுக்கு எச்சரிக்கை


* தேர்வர்களின் வயது, கல்வித் தகுதி, சாதி, தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள், மதம், பாலினம், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத்தினர், பணி அனுபவம் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்தில் சரியாக உள்ளிட்டிருக்க வேண்டும். 


* விண்ணப்பம் தவறானது அல்லது முறைகேடானது என கண்டறியப்பட்டால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதேபோல அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ரத்து செய்யப்படும். மேலும்  அடுத்ததாக அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 


பின்னணி என்ன?


அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின.  


முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், 55,071 தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.