குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-ல் 625 காலிப்பணியிடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Continues below advertisement

மொத்தம் 1270 பணியிடங்கள்

சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 பிற்சேர்க்கை இன்று (18.11.2025) வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களுக்காக அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1270 ஆகும்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) 2022-ம் ஆண்டு அறிவிக்கையில் ஐந்து நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024-ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், ஆக மொத்தம் ஏழு நிதியாண்டுகளுக்கு 8784 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1254 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1270 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அதிகரிக்க வாய்ப்பு

2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத்துறை / நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

எந்தெந்த பதவிகளுக்கு எவ்வளவு பணி இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு உள்ளன என்ற விவரத்தை https://tnpsc.gov.in/Document/english/Addendum%2011A_English.pdf என்ற அறிவிக்கையின் மூலம் தேர்வர்கள் காணலாம். 

மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.