குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு நேரத்தை மாற்றி டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலை வினாத் தாள்கள்‌ வழங்குவதில்‌ ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுசெய்யும்‌ வகையில்‌ மதியத் தேர்வு 2.30 மணிக்குத்‌ துவங்கி 5.30 மணி வரை நடைபெறும்‌ என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 


 2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.


இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெறுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.


காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி குரூப்- 2, குரூப்- 2ஏ முதன்மைத் தேர்வின் காலை அமர்வில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் தேர்வு உரிய நேரத்துக்குத் தொடங்கப்படவில்லை. 


இந்நிலையில் குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு நேரத்தை மாற்றி டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலை வினாத் தாள்கள்‌ வழங்குவதில்‌ ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுசெய்யும்‌ வகையில்‌ மதியத் தேர்வு 2.30 மணிக்குத்‌ துவங்கி 5.30 மணி வரை நடைபெறும்‌ என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தோ்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு -2 (தொகுதி- 2, & 2ஏ)வின்‌ முதன்மை எழுத்துத்‌ தேர்வு இன்று (25.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகல்) 20 மாவட்டத்‌ தேர்வு மையங்களில்‌ நடைபெற்று வருகிறது. வருகைப் பதிவேட்டில்‌ உள்ள தேர்வர்களின்‌ பதிவெண்களின்‌ வரிசையிலும்‌, வினாத்தாட்களில்‌ உள்ள பதிவெண்களின்‌ வரிசையிலும்‌ இருந்த வேறுபாட்டின்‌ காரணமாக காலை வினாத் தாள்கள்‌ வழங்குவதில்‌ காலதாமதம்‌ ஏற்பட்டது.


தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும்‌ துவங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடுசெய்யும்‌ வகையில்‌ மதிய தேர்வு 2.30 மணிக்குத்‌ துவங்கி 5.30 மணி வரை நடைபெறும்‌’’.


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தோ்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ்‌ தெரிவித்துள்ளார்.


முன்னதாக மதியத் தேர்வு சரியாக 2 மணிக்குத் தொடங்குவதாக இருந்த நிலையில், அரை மணி நேரம் தாமதமாக 2.30 மணிக்குத் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.