குரூப் 2, 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2025 நாளன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறி உள்ளதாவது:

Continues below advertisement


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) (அறிவிக்கை எண்.08/2024 நாள் 20.06.2024 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று கலந்தாய்வு


மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2025 நாளன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு


மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள். நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.


மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மறு வாய்ப்பு கிடையாது


சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.