குரூப் 1-ற்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC Group I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.


இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி


இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20,000-ற்கும் மேற்பட்ட மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ/ மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.


மாவட்டங்கள் முழுவதும் பயிற்சி வகுப்புகள்


தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 1 (TNPSC GROUP I) தேர்விற்கு 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1-ற்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC Group I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. அதிகளவிலான பயிற்சித் தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.


இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்செய்தியினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.


அதேபோல https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், வினாத் தாள்கள், பாட நூல்கள், மாதிரித் தேர்வுக்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை க்ளிக் செய்து மாணவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம்.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnvelaivaaippu.gov.in/