கருப்பு மை தவிர வேறு நிறப் பேனாக்களைப் பயன்படுத்துவது, கேள்விக்கு தொடர்பில்லாத பதில்களை எழுதுவது உள்ளிட்ட காரணங்களுக்காக தேர்வர்களின் விடைப்புத்தகம் செல்லாதது ஆக்கப்படும் என்று தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1பி, 1சி முதன்மைத் தேர்வு டிசம்பர் 3 முதல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை அடுத்து, டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு, தேர்வு விதிமுறைகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
தேர்வர்களுக்கான அறிவுரைகள் - பேனா
* தேர்வர்கள் தேர்வுக்கு கருப்பு மைப் பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
* தேர்வர்கள் விடைப்புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்களை / தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல், போன்றவற்றுக்கு ஒரே வகையான கருப்பு மைப் பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்து முனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
* தேர்வர்கள் மேற்கூறிய தேவைகளுக்கு ஒரே வகை கொண்ட கருப்புமைப்பேனாக்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும்.
* தேர்வர்கள் கருப்பு மைப் பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
தேர்வர்களுக்கான அறிவுரைகள் - விடைப்புத்தகம்
* தேர்வர் கேள்விக்கு தொடர்பில்லாத அல்லது தேர்விற்கு சம்பந்தமில்லாத எதாவது கருத்துக்கள் மற்றும்பொருத்தம் இல்லாதவற்றை தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதுவது.
* விடைப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள பட்டைக் குறியீடு சேதப்படுத்தப்பட்டிருத்தல்.
* பிற தேர்வர்களின் இருக்கையில் தவறாக அமர்ந்து தேர்வு எழுதுதல் / பிற தேர்வர்களின் விடைப்புத்தகத்தை பயன்படுத்துவது ஆகியவற்றைச் செய்தால், விடைத்தாள் செல்லாதது (Invalidation of answer booklet) ஆக்கப்படும்.
தேர்வர்களுக்கான அறிவுரைகள் - விடைப்புத்தகம் செல்லாதது ஆக்கப்படல்!
தேர்வர்கள் தேர்வு எழுதும்போது ஒயிட்னர், sketch pens, பென்சில், வண்ணப் பென்சில்கள், வண்ண மைப் பேனா, crayons போன்றவற்றை உபயோகப்படுத்துதல், வினாத்தொகுப்பு / விடைப்புத்தகத்தில் குறிப்பாக அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில்மதக் குறியீட்டினை எழுதுதல், தேர்வரின் பெயரை எழுதுதல், கையொப்பம், தொலைபேசி எண், அலைபேசி எண், வேறு ஏதேனும் பெயர்களை எழுதுதல், சுருக்கொப்பம் மற்றும் முகவரி எழுதுதல.
தேர்வர் தன்னுடைய தேர்ச்சி தொடர்பாக விடைப் புத்தகத்தில் மதிப்பீட்டாளரின் பரிவைத் தூண்டும் வகையில் எழுதுதல்.
விடைப்புத்தகத்தில் உரிய இடங்களில் தேர்வர் கையொப்பமிடாத நேர்வுகளில்’’
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.