தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்ட முடிவை கல்லூரிகளுக்கு அனுப்பிய கல்லூரிக்கல்வி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும், விளக்கம் கேட்கும் கடிதத்தை உடனே தமிழக அரசு திரும்பப்பெற  வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

Continues below advertisement

இடதுசாரி கட்சிகளின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க வேண்டும் என தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவின்படி, கல்லூரிக்கல்வி இயக்குநருக்கும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்கும், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, இது குறித்து 20.08.2026 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான தகவலை வழங்க வேண்டும் என உயர்கல்வித் துறை சிறப்புச் செயலர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

கடும் கண்டனம்

அதன் அடிப்படையில், அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர். சிந்தியா செல்வியிடம் விளக்கம் கேட்டிருப்பதை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Continues below advertisement

கல்லூரிக்கல்வி இயக்குநருக்கு, தொழில் நுட்பக்கல்லூரி இயக்குநருக்கு, அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய உயர்கல்வித் துறை சிறப்புச் செயலர் அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுள்ளார்.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் மட்டும் விளக்கம் கேட்பது ஏன்?

அவ்வாறெனில் அவரிடம் விளக்கம் கேட்கப்படாத போது, உயர் கல்வித்துறை சிறப்புச் செயலர்  அனுப்பிய சுற்றறிக்கையை 19.08.2026 அன்று திரும்பப்பெற்ற நிலையில், இடதுசாரிக் கட்சியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அதனை, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்கும் அனைத்து  கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் அனுப்பி 20.08.2026 அன்றுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, உயர் கல்வித்துறை சிறப்புச்செயலருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சென்னை பல்கலைக் கழக பதிவாளருக்கு விளக்கம் கேட்கப்படாத போது, கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் மட்டும் விளக்கம் கேட்கப்பட்டதன் நோக்கம் தெரியவில்லை.

மேற்குறிப்பிட்ட மூவருமே, தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து வந்த தகவலுக்கு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை செய்தவர்களே. எனவே அரசின் சுற்றறிக்கைக்கு, நடவடிக்கை எடுக்க முற்பட்டவரிடம் விளக்கம் கேட்பது என்பதையும்,  ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் கல்லூரிக்கல்வி இணை இயக்குநரை பொறுப்பாக்குவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு வழங்கப்பட்ட விளக்கம் கேட்கும் கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்துவதாக அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச்செயலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.