Tamil Nadu Engineering Admission 2025 Rank List: பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய, தகுதிவாய்ந்த 2.41 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 7ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வு

145 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொதுப் பிரிவினருக்கு ஜூலை 14ஆம் தேதி கலந்தாய்வு ஆரம்பிக்கிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து எஸ்சி அருந்ததியர் காலியிடங்கள், எஸ்சி வகுப்புக்கான கலந்தாய்வு ஜூலை 25ஆம் தேதி மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ஜூலை 26ஆம் தேதியுடன் முடியும் கலந்தாய்வு

ஜூலை 26ஆம் தேதியுடன் 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு முடிவடைய உள்ளது. இதனை அமைச்சர் கோ.வி.செழியன் வெளியிட்டார். அதேபோல 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 47 ஆயிரம் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, மே 7ஆம் தேதி முதல், ஜூன் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் இணையம் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, அமைச்சர் கோவி.செழியன் கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் இன்று (ஜூன் 27) வெளியிட்டார்.

மாணவர்கள் https://static.tneaonline.org/docs/ACADEMIC_GENERAL_RANK_LIST_2025.pdf?t=1750999997778 என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவரிசைப் பட்டியலைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல 8,657 பேரின் விண்ணப்பங்கள், தகுதியற்றவை என்று கூறி நிராகரிக்கப்பட்டு உள்ளன. தரவரிசைப் பட்டியலில் இடம் பெறாத மாணவர்கள், இந்த பட்டியலை https://static.tneaonline.org/docs/INELIGIBLE_APPLICATIONS_2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து சோதித்து அறிந்துகொள்ளலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tneaonline.org/