தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி 10 நாட்கள் கடந்த நிலையில், அதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொட உள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
மே 7 முதல் விண்ணப்பப் பதிவு
இதற்கிடையே பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகின. எனினும் அதற்கு முன்பாக 7ஆம் தேதியே பொறியியல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இந்த 10 நாட்களில், விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொட உள்ளது.
ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, 1,86,835 பேர் தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். 1,18,491 பேர் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர். மேலும் 76,584 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
உதவி அழைப்பு மையம்
மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://www.tneaonline.org/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் கேட்கப்பட்டுள்ள இ மெயில் முகவரி, பிறந்த தேதி, பிளஸ் 1 தேர்ச்சி, தகுதித் தேர்வு ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
OC/ BC/ BCM/ MBC& DNC பிரிவு மாணவர்களுக்கு - ரூ.500/
SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250/.
இதுதவிர, கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான முன் வைப்புத் தொகையோ அல்லது கலந்தாய்வுக்கட்டணமோ எதுவும் இல்லை.
மேலும், மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு...
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: tneacare@gmail.com
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.