1996 ஆசிரியர் இடங்களுக்கு திட்டமிட்டபடி நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வை எழுத 2.36 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

Continues below advertisement

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளதாவது:

''தமிழ்நாட்டில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணிகள் சார்ந்த 1996 காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கை எண். 02/2025 கடந்த 10.07.2025 அன்று வெளியிடப்பட்டு 12.10.2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று தேர்வு நடைபெறுகிறது.

Continues below advertisement

இந்த அறிவிக்கையின்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.

2,36,530 தேர்வர்கள் விண்ணப்பம்

இதன் அடிப்படையில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாடங்கள் சார்ந்த காலிப் பணியிடங்களுக்கு 2,36,530 பணிநாடுநர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுள் 1,73,410 ஆண்கள், 63,113 பெண்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். குறிப்பாக, 3,734 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். 856 தேர்வர்கள் Scribe உடன் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு சார்ந்த OMR விடைப் படிவங்கள் மற்றும் வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களை முதல் நாளே பார்வையிடலாம்

மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் விண்ணப்பதாரர்களின் வசதிகேற்ப அவரவர் வசிப்பிட மாவட்டங்களிலே அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நுழைவுச் சீட்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களை தேர்வுக்கு முந்தைய நாளே பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம் என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தேர்வுகள் சார்ந்து ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு (Liaison Officer) அவர்களது பெயர் மற்றும் அலைபேசி எண் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கு ஏதேனும் தேர்வு சார்ந்த ஐயப்பாடுகள் இருப்பின் அவர்களை தொடர்பு கொண்டு உரிய தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/