ஆசிரியராகப் பணியில் தொடர டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பெறாத அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை அரசு தொடங்கி உள்ளது.
ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி திபான்கர் தத்தா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், தகுதித் தேர்வு 2011-ல் கட்டாயம் ஆக்கப்படுவதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
1.76 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழ்நாட்டில் சுமார் 1.76 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்களை தமிழக அரசு என்றுமே கைவிடாது என்றும் ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதேபோல ஆசிரியர் சங்கங்களுடன் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தினார்.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பெறாத ஆசிரியர்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை அரசு தொடங்கி உள்ளது. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் இதில் அடங்குவர்.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்துள்ள தகவலில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.