தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு கணிப்பொறிகள்‌, மடிக்கணினிகள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள்‌ வழங்கப்பட்டு உள்ளன.  மேலும்‌ தமிழ்நாட்டில்‌ செயல்படும்‌ அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ திறன்‌ வகுப்பறைகளும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ உயர்‌தொழில்‌ நுட்பக்‌ கணினி ஆய்வகங்களும்‌ தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்‌ மூலம்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ செயல்பாட்டில்‌ புதிய அறிவியல்‌ நுட்பப் பயன்பாடுகளின்‌ வழியாக சிறந்த அனுபவங்களை மாணவர்கள்‌ பெருமளவில்‌ பெற்றிட முடியும்‌.

இத்தகைய கணினி சார்ந்த புதிய அறிவியல்‌ நுட்பங்களுடன்‌ கற்றல்‌ செயல்பாட்டிற்கு பெரிதும்‌ துணைபுரியும்‌ வகையில்‌ மணற்கேணி செயலி வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும்‌ க்யூஆர் கோடு ஒட்டப்பட்டு உள்ளதா என்பதையும்‌ அதன்‌ வழியாக ஆசிரியர்கள்‌ தங்களின்‌ கற்பித்தல்‌ பாடப்பொருளுக்கு ஏற்றவாறு மாநில பாடத்திட்ட புத்தகங்களில்‌ இடம்பெற்ற பாடங்களுக்கான காணொலி காட்சிகளின்‌ வீடியோக்களை பொருத்தமான இடங்களில்‌ பயன்படுத்தி மாணவர்களின்‌ கற்றலை மேம்படுத்துகின்றார்களா என்பதையும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ பள்ளிப்‌ பார்வை/ஆய்வுகளின்‌போது உறுதி செய்திடல்‌ வேண்டும்‌. மேலும்‌ எத்தனை பள்ளிகளில்‌ எத்தனை ஆசிரியர்கள்‌ மணற்கேணி செயலியைப் பதிவிறக்கம்‌ செய்துள்ளனர்‌ என்பதை 21.01.2025ஆம்‌ தேதிக்குள்‌ அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களும்‌ கண்டறிய வேண்டும்‌.

ஜனவரி 23 கடைசி

மணற்கேணி செயலியை பதிவிறக்கம்‌ செய்யாத பள்ளிகள்‌ / ஆசிரியர்களை 23.01.2025ஆம்‌ தேதிக்குள்‌ பதிவிறக்கம்‌ செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்டக்‌ கல்வி அலுவலரும்‌ (தொடக்கக்‌ கல்வி) மேற்கொள்ள வேண்டும்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்டத்தில்‌ பங்கேற்க வரும்‌ மாணவர்களின்‌ பெற்றோர்களிடத்தில்‌ மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வினை பள்ளி ஆசிரியர்கள்‌ மற்றும்‌ தலைமை ஆசிரியர்கள்‌ ஏற்படுத்திடவும்‌ இச்செயலியை அக்கூட்டம்‌ நடைபெறும்‌ நாளன்றே அவர்களது பெற்றோர்களின் கைபேசியில்‌ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம்‌ செய்து கொடுத்து அச்செயலி வழியாக பாட விவரங்களை எவ்வாறு மாணவர்கள்‌ வீட்டில்‌ பயன்படுத்தி கற்க முடியும்‌ என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.

ஆனால்‌ மணற்கேணி செயலியை பதிவிறக்கம்‌ செய்துள்ளவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையில் சிறு பகுதியாகவே உள்ளது. அனைத்து பெற்றோர்கள்‌ / மாணவர்களிடத்தில்‌ இச்செயலி மூலமாக கற்றல்‌ செயல்பாடு நடைபெறுவதை மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ உறுதி செய்திடல்‌ வேண்டும்‌. 

 

பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ மொத்த ஆசிரியர்களின்‌ எண்ணிக்கைக்கும்‌ மணற்கேணி செயலியை பதிவிறக்கம்‌ செய்தோ அல்லது https://manarkeni.tnschools.gov.in இணையம் மூலம் பதிவிறக்கம்‌ செய்துள்ள ஆசிரியர்களின்‌ எண்ணிக்கைக்கும்‌ அதிகளவில்‌ வித்தியாசம்‌ உள்ளது.

கட்டணம் இல்லாமல் பாடங்களுக்கான காணொலி

மணற்கேணி செயலி மூலமாகவோ அல்லது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதள வழியாகவோ கட்டணம்‌ எதுவுமின்றி அனைவரும்‌ எளிதில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரையுள்ள பாடங்களுக்கான காணொலிக் காட்சிகளை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌ ((Open source and can be downloaded free) என்பதை ஆசிரியர்களுக்குத்‌ தெரிவித்திடல்‌ வேண்டும்‌. மேலும்‌ எத்தனை ஆசிரியர்கள்‌ / மாணவர்கள்‌ அல்லது மாணவர்களின்‌ பெற்றோர்கள்‌ காணொலி காட்சிகளை பதிவிறக்கம்‌ செய்துள்ளனர்‌ என்பதை அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களும்‌ 24.01.2025ஆம்‌ தேதிக்குள்‌ கண்டறிய வேண்டும்‌.

2025ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ முதல்‌ அனைத்து அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ கணினியுடன்‌ கூடிய கற்றல்‌ - கற்பித்தல்‌ செயல்பாடுகள்‌ நடைபெறுவதையும்‌ மணற்கேணி செயலி மற்றும்‌ மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌   பயிற்சி நிறுவனம்‌ உருவாக்கியுள்ள காணொலிகள்‌ வகுப்பறை செயல்பாட்டில்‌ தொடர்புடைய பாடங்களுக்காக பயன்படுத்தப்படுவதை முதல்நிலை கண்காணிப்பு அலுவலர்களாக உள்ள வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ உறுதி செய்திடல்‌ வேண்டும்‌. அதேபோல் மணற்கேணி செயலி பயன்படுத்தும்‌ ஆசிரியர்கள்‌ - மாணவர்கள்‌ பெற்றோர்கள்‌ ஆகிய பயனாளர்களின்‌ எண்ணிக்கையை அதிகளவில்‌ உயர்த்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌ என்றும் தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.