தென் தமிழகத்தில் வரலாறு காணாத கன மழை கொட்டித் தீர்த்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட மாணவர்களுக்கு, டிசம்பர்23ஆம் தேதி வரையிலான அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் கால வரையறை இல்லாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் தென்மாவட்டங்களில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மழைப் பொழிவு குறைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கி உள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் எப்போது மீண்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை பல்கலைக்கழகம் மீண்டும் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
இதற்கிடையே கன மழை காரணமாக நேற்று (டிச.18) நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்தார்.
கால வரையறை இல்லாமல் ஒத்திவைப்பு
தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள், கால வரையறை இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல நாகர்கோயில் மையத்தில் நடைபெறுவதாக இருந்த தொலைதூரப் படிப்புகளுக்கான தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
வரலாறு காணாத பெரு மழையால் தலைநகர் சென்னைஉள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தென் தமிழகமும் பாதிப்பைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: EXCLUSIVE: பெருமழை, பேரிடர், வெள்ளம்: இனி இதுதான் எதிர்காலமா?- நீரியல் நிபுணர்கள் சிறப்புப் பேட்டி!