பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதியோடு முடிவு பெற்றது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 8ஆம் தேதியோடு இவர்களுக்குத் தேர்வு முடிகிறது.
அதேபோல 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்றுடன் (ஏப்.5-ம் தேதி) பருவத் தேர்வுகள் முடிவடைகின்றன. இவர்களுக்கு நாளை (ஏப்.6-ம் தேதி) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது?
இந்த நிலையில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் முறையே ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டன. ரம்ஜான் பண்டிகை காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வுகள் இல்லை. இதனால் பள்ளிகளுக்கு அந்த நேரத்தில் கோடை விடுமுறை உண்டா இல்லையா என்று கேள்வி எழுந்தது. மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்துக்கு ஆளாகினர்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, ரம்ஜான் பண்டிகை மற்றும் மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. பின்பு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். அடுத்த நாளான ஏப்ரல் 24-ல் இருந்து மீண்டும் கோடை விடுமுறை தொடங்கும். பள்ளிகள் திறக்கப்படும் நாள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆசிரியர்கள் அனைவருக்கும் வருகை கட்டாயம்
அதேநேரத்தில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், பள்ளி இறுதி வேலை நாளான ஏப்ரல் 26ஆம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வர வேண்டியது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத் தாள் மதிப்பீடு மற்றும் பிற அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.