தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு இன்று (டிசம்பர் 10) தொடங்கியுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது.

Continues below advertisement

அதேபோல 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கும் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. 

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (டிசம்பர் 10ஆம் தேதி) தமிழ் தேர்வுடன் அரையாண்டுத் தேர்வு தொடங்கி உள்ளது. தொடர்ந்து 12ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வும் 15ஆம் தேதி கணக்குப் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வியாழக் கிழமை அன்று அறிவியல் பாடத் தேர்வு நடக்கிறது. அதேபோல 22ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வும் 23ஆம் தேதி விருப்பப் பாடத்துக்கும் அரையாண்டுத் தேர்வு நடக்க உள்ளது.

Continues below advertisement

பிளஸ் 2 தேர்வு அட்டவணை

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்று தமிழ் தேர்வு தொடங்கி உள்ளது. தொடர்ந்து 12ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வும் 15ஆம் தேதி கணக்குப் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது. டிசம்பர் 23 வரை தேர்வுகள் நடக்கின்றன.

இவர்கள் அனைவருக்கும் காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்துப் பார்க்கவும் அடுத்த 5 நிமிடங்கள் தேர்வரின் விவரங்களை சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக 10 மணிக்குத் தேர்வு தொடங்கி, 1 மணி வரை நடைபெற உள்ளது.

1 முதல் 5ஆம் வகுப்புக்கு எப்போது?

அதேபோல தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23ஆம் தேதி வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடக்க உள்ளது.

அரையாண்டு விடுமுறை, பள்ளிகள் திறப்பு எப்போது?

டிசம்பர் 23ஆம் தேதியோடு அரையாண்டுத் தேர்வுகள் முடிவுபெறும் நிலையில், 24ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் ஆகிய கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

புகைப்படம் எடுக்கத் தடை

இதற்கிடையே அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்களை, தேர்வு முடியும் முன்னரே செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. தேர்வு நேரம் முடிந்தபிறகே மாணவர்களிடம் விடைத் தாள்களைப் பெற வேண்டும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.