பிப்ரவரி மாதத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை எடுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதால், மாணவர்களும் அரசு ஊழியர்களும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல், அரையாண்டு விடுமுறை
விடுமுறை என்றாலே மாணவர்களுக்குக் கொண்டாட்டமும் கும்மாளமும்தான். அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து வந்தது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் ஃபெஞ்சல் புயலால் விடுமுறை அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டது. அதை அடுத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
அரையாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிக்குத் திரும்பி கற்றல் தொடங்கிய அதே வேளையில் பொங்கல் பண்டிகையும் வந்தது. பொங்கலுக்காகத் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில், தொடர்ச்சியாக இத்தனை நாட்கள் விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் குதூகலத்தில் ஆழ்ந்தனர்.

பொங்கல் விடுமுறை
ஆனால் பொங்கல் விடுமுறை முடிந்து வந்த பிறகு இனி எந்த விடுமுறையும் இல்லை என்று மாணவர்கள் ஏங்கினர். குடியரசு தினமும் ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால் அரசு ஊழியர்களும் மாணவர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக மாணவர்கள் 4 நாட்கள் விடுமுறை எடுக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
எப்படி?
ஏராளமான விடுமுறைகளோடு டிசம்பர் மாதமும் ஜனவரி மாதமும் கழிந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் பெரிதாக விடுமுறைகள் எதுவும் இல்லை. எனினும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசம் வர உள்ளது. செவ்வாய்க் கிழமை அன்று தைப்பூசம் வருவதால், முந்தைய நாளான திங்கள் கிழமை அன்று ஒருநாள் விடுமுறை எடுத்தால் போதும்.
முந்தைய சனி, ஞாயிற்றுக் கிழமையோடு 4 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்க முடியும் என்று மாணவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதை அடுத்து, மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வர உள்ளது குறிப்பிடத்தக்கது.